செய்திகள்

நோக்கியா நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கைகள் திரும்ப பெறப்படும் - மத்திய அரசு

Published On 2018-04-20 05:49 GMT   |   Update On 2018-04-20 05:49 GMT
இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தியதால் நோக்கியா நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கைகள் விரைவில் திரும்ப பெறப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. #Sriperumbudur #Nokia
காஞ்சிபுரம்:

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ‘நோக்கியா’ தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலை ஆகும். தமிழக அரசுக்கும் நோக்கியா நிறுவனத்திற்கும் இடையே 2005-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழக அரசின் உதவியோடு ஒரு சர்வதேச மின்னணு தயாரிப்பு மையம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த அரசு வரி விதிப்புக் கொள்கை காரணமாக 2014-ம் ஆண்டு நவம்பரில் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் 15 ஆயிரம் நேரடி தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்தனர்.

2015-ம் ஆண்டு மேல்-சபையில் நோக்கியா தொழிற்சாலை புனரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று மத்திய அரசு அறிவித்தது. அப்போது, நோக்கியா நிறுவனம் 1600 கோடி ரூபாய் வரி பாக்கியை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும். அதன் பின்னரே அந்த நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கை திரும்ப பெறப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தியதால் நோக்கியா நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கைகள் விரைவில் திரும்ப பெறப்படும் என தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனம் வரி பாக்கி தொடர்பாக இந்தியா, பின்லாந்து அரசுகளுக்கிடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோக்கியா நிறுவனம் 1600 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தியது.

இதையடுத்து, நோக்கியா நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் விரைவில் திரும்பப் பெறப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நோக்கியா நிறுவனம் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த எங்களது தொழிற்சாலை விரைவில் வேறு நிறுவனத்திற்கு விற்கப்படும் என அறிவித்துள்ளது. #Sriperumbudur #Nokia #Tamilnews
Tags:    

Similar News