செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் புகை இல்லா கிராமங்களை உருவாக்க நடவடிக்கை

Published On 2018-04-18 18:05 GMT   |   Update On 2018-04-18 18:05 GMT
அரியலூர் மாவட்டத்தில் புகை இல்லா கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தஞ்சை மண்டல விற்பனை உதவி மேலாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் ராஜாஜி நகரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை மண்டல விற்பனை உதவி மேலாளர் சுனில் பத்துலா தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்பில் வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் உஜ்வாலா தினம் கொண்டாடப்பட உள்ளது. உஜ்வாலா திட்டம் மூலம் பாதுகாப்பான மற்றும் நீடித்த எரிவாயு பயன்பாட்டை கிராம மக்களிடம் எடுத்துக்கூறி புகை இல்லாத கிராமங்களை அமைக்க உள்ளோம்.

அரியலூர் மாவட்டத்தில் அயன் தத்தனூர், குழுமூர், நமங்குணம், காட்டாத்தூர், வெட்டியார்வெட்டு, காட்டகரம், இளையபெருமாள்நல்லூர், பொட்டவெளி, சென்னிவனம் ஆகிய 9 கிராமங்கள் முதல் கட்டமாக புகை இல்லா கிராமமாக மாற்றப்படும்.

உஜ்வாலா திட்டம் தொடர்பாக வருகிற 20-ந்தேதி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் மேற்கண்ட கிராமங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

இதே போல் கள்ளங்குறிச்சி, வானதிராயன்பட்டினம், கூவத்தூர், செந்துறை, இடங்கன்னி, அண்ணிமங்கலம், பெரியதிருக்கோணம், மணகெதி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு இலவச எரிவாயு இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு கூறினார். கூட்டத்துக்கு இப்ராகிம் முன்னிலை வகித்தார். அனுராதாபார்த் சாரதி வரவேற்றுப்பேசினார். இதில் பாரத்பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
Tags:    

Similar News