செய்திகள்

கொட்டிவாக்கத்தில் கணவன்-மனைவி கொலையில் வடமாநில வாலிபர் கைது

Published On 2018-04-18 06:48 GMT   |   Update On 2018-04-18 06:48 GMT
கொட்டிவாக்கத்தில் கணவன்-மனைவி கொலையில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோழிங்கநல்லூர்:

கொட்டிவாக்கம், ராஜீவ் காந்தி சாலையை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 73). இவரது மனைவி வள்ளி நாயகி (68). இவர்கள் 3 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர்.

கீழ்தளத்தில் தங்கும் விடுதி உள்ளது. 3-வது தளத்தில் மாயாண்டி மனைவியுடன் தங்கி இருந்தார்.

நேற்று இரவு மாயாண்டியின் வீட்டுக்கு அவரது உறவினர்கள் வந்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் மாயாண்டியும், வள்ளிநாயகியும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

உருட்டுக்கட்டையால் தாக்கி அவர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் வள்ளி நாயகி அணிந்திருந்த 13 பவுன் நகையும் மாயமாகி இருந்தது.

இது குறித்து துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

கீழ்தளத்தில் உள்ள தங்கும் விடுதியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கொலை நடந்த நேரத்தில் மேல் தளத்தில் உள்ள மாயாண்டி வீட்டிற்கு வாலிபர் ஒருவர் செல்வதும், சிறிது நேரத்தில் அவர் இறங்கி போவதும் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கியபோது மாயாண்டியையும், வள்ளி நாயகியையும் கொலை செய்தது டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான வட மாநிலத்தை சேர்ந்த ஆலன் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 13 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

டைல்ஸ் ஓட்டிய பணிக்கு பேசிய கூலிப்பணம் தராததால் மாயாண்டியை அடித்து கொலை செய்ததாகவும் இதனை தடுக்க முயன்ற அவரது மனைவியையும் அடித்து கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு அவரது நண்பர்கள் யாரேனும் உதவினார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News