செய்திகள்

மாங்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 கோடி மோசடி - 200 பேர் புகார்

Published On 2018-04-16 09:20 GMT   |   Update On 2018-04-16 09:20 GMT
மாங்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 கோடி மோசடி செய்த தொழிலதிபர் குறித்து 200 பேர் புகார் அளித்துள்ளனர்.
ஆலந்தூர்:

மாங்காடு வைகுண்ட பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (70) தொழிலதிபர். இவர் தனது மனைவி வரலட்சுமி பெயரில் 40 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு ரூ.1 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வருகிறது.

பழனி மீதுள்ள நம்பிக்கையில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் பலர் இவரிடம் சீட்டுக்காக பணம் செலுத்தினர். இந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக இவர் சீட்டு போட்டவர்கள் யாரையும் ஏலம் எடுக்க விடவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து பணத்தை திருப்பி கேட்ட போது காலதாமதம் செய்து வந்தார். இந்த நிலையில் பழனி திடீரென தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரது வீடு மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் 200 பேர் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்தில் திரண்டு புகார் செய்தனர். அதில் பழனி என்பவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி அளவில் மோசடி செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஏலச்சீட்டு மோசடி குறித்து புகார் செய்தவர்களில் மாங்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சீனிவாசனும் ஒருவர். தி.மு.க. பிரமுகரான இவரிடம் இந்த ஏலச்சீட்டு நிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது.
Tags:    

Similar News