செய்திகள்

அரியலூர் அருகே புதிய தேர் வெள்ளோட்டத்தில் சக்கரத்தில் சிக்கி பக்தர் பலி

Published On 2018-04-15 13:44 GMT   |   Update On 2018-04-15 13:44 GMT
அரியலூர் அருகே புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பக்தர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காட்டில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் தேர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் தேர்த்திருவிழாவின்போது தேரின் அச்சு முறிந்து திரு விழா நிறுத்தப்பட்டது. தேரை சீரமைக்க வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ரூ.22 லட்சம் மதிப்பில் தேரை புதுப்பிக்கும் பணியை தொடங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றியுள்ள சிலுப்பனூர், சேந்தமங்கலம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தேரின் சக்கரத்தை முட்டுக்கட்டை கொடுத்து நிறுத்த முயன்ற சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பக்தர் பெரியசாமி மீது தேர் சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பக்தர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News