செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு- தி.மு.க.வினர் சாலை மறியல்

Published On 2018-04-04 13:09 GMT   |   Update On 2018-04-04 13:09 GMT
கந்தர்வகோட்டை அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள சுந்தம்பட்டி, தச்சன்குறிச்சி தொடக்க கூட்டுறவு வங்கிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் பரிசீலனையின் போது குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை மட்டும் தேர்தல் அதிகாரிகள் இயக்குனர், தலைவராக தேர்வு செய்து வங்கியில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. பிற கட்சியினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து தி.மு.க மற்றும் பிற கட்சியினர் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பூட்டு போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கந்தம்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத திற்கு ராமசாமி தலைமை தாங்கினார். இதில் நமச்சிவாயம், சவுந்தரராஜன், முருகேசன், முத்துகுமார், ராமராஜன், அய்யாவு, வீரச்சாமி, லெனின்செல்லத்துரை உள்பட  பலர் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இளங்கோவன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் தமிழ்அய்யா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News