கீரனூர் அருகே பள்ளி தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளை
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள சீனிவயல் சூப்பர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 54). இவர் மோசகுடி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எஸ்தர் லில்லி (48). இவர் விசலூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டு கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று மதியம் பள்ளியில் இருந்து சாப்பிடுவதற்காக பாலகிருஷ்ணன் மட்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 பீரோக்களையும் மர்மநபர்கள் உடைத்து, அவற்றில் இருந்த 40 பவுன் தங்கநகைகள், ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பாலகிருஷ்ணன் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் தலைமையில் போலீஸ் சப்-இன்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த திருட்டு சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமையாசியர் வீட்டில் நகை- பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.