செய்திகள்

காளையார் கோவில் - திருப்புவனத்தில் வீடுகளின் கதவை உடைத்து 36 பவுன் நகை கொள்ளை

Published On 2018-03-21 15:33 IST   |   Update On 2018-03-21 15:33:00 IST
காளையார் கோவில் மற்றும் திருப்புவனத்தில் வீடுகளின் கதவை உடைத்து 36 பவுன் நகைகள் கொள்ளையடிக்க சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. சம்பவத்தன்று ஜனகராஜ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்த அவர்கள் பீரோவை உடைத்து 30 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

வீடு திரும்பிய ஜனகராஜ் கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

திருப்புவனம் அருகே உள்ள கழுகர்கடை கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 41). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு திருப்புவனத்துக்கு சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5½ பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகர், காளையார் கோவில், தேவகோட்டை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News