செய்திகள்

ரத யாத்திரை: போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்- திருநாவுக்கரசர்

Published On 2018-03-21 13:42 IST   |   Update On 2018-03-21 13:42:00 IST
ரத யாத்திரைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது கோழைத்தனமானது, காட்டு மிராண்டித்தனமானது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற ஆட்களை காவல்துறை கைது செய்ய வேண்டும்.

ராமர் ரத யாத்திரை தமிழகத்துக்கு வந்துள்ளது. அத்வானி ரத யாத்திரை கேரளா வழியாகதான் சென்றது. இங்கு வரவில்லை.

தமிழ்நாட்டில் மத வழிபாடு உரிமை என்பது வேறு, மத தேசம் என்று பரப்புவது என்பது வேறு.



தமிழ்நாட்டில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஒரே குடும்பமாக, சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பா.ஜனதாவின் துணை அமைப்புகளான இந்துத்துவா அமைப்புகள் பிரித்தாளும் முயற்சி கண்டிக்கத்தக்கது. ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்க கூடாது.

ரத யாத்திரைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

சட்டசபையில் ரதயாத்திரை பற்றி பேசுவதற்கு தி.மு.க., காங்கிரசுக்கு வாய்ப்பு தராததால் மறியலில் ஈடுபட்டனர். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டும். பழிவாங்ககூடாது.

ரஜினி தன் பின்னால் பா.ஜனதா இல்லை என்று கூறியதை வரவேற்கிறேன்.

தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு அஸ்திவாரமும் இல்லை, வாய்ப்பும் கிடையாது.

அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல்காந்தியின் பேச்சு காங்கிரசாரை உற்சாகமாக வைத்துள்ளது.

புதிய தலைமைகள் வரும் போது மாற்றங்கள் இருக்கும். தமிழ்நாடு காங்கிரசிலும் தேவையான நேரத்தில் மாற்றங்கள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News