செய்திகள்

பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாகி பாதிரியார் மீது வழக்கு

Published On 2018-03-21 05:22 GMT   |   Update On 2018-03-21 05:22 GMT
குழந்தைகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருந்த பாலேஸ்வரம் கருணை இல்ல நிர்வாகி பாதிரியார் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் கருணை இல்லம் உள்ளது. கடந்த மாதம் கருணை இல்லத்து காய்கறி மூட்டைகள் ஏற்ற வந்த வேனில் முதியவர் சடலம் கொண்டு வரப்பட்டது. மேலும் அதே வேனில் 2 முதியவர்கள் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் வெளிநாடுகளில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் உத்தரவுப்படி, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட 6 துறை அதிகாரிகள் கருணை இல்லத்தில் அதிரடி விசாரணை நடத்தினர்.

அப்போது உரிய பராமரிப்பு இன்றி முதியோர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் கான்கிரிட் சுவரில் உள்ள சிறிய அறை போன்ற துளையில் அடைத்து அடக்கம் செய்யப்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கருணை இல்லத்தில் இருந்த முதியவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்கள் தொழுப்பேடு, பனையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அரசு அனுமதி பெற்ற காப்பங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். உடல்நலம் குன்றியவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டனர்.



இந்த நிலையில் செங்கல்பட்டு இளைஞர் நீதி குழுமம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் சார்பில் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதில், “பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் எமா (4), ஜெசி (2), இளவரசி (11), 1½ வயது ஏஞ்சலினா, ஜெஸ்லின் (7), சபிதா நான்சி (9), ரோஸ்லின் ஜேனோவா (8), சூரிய பிரகாஷ் (9), தேசி கபிரியன் (6) ஆகிய 9 குழந்தைகளை சட்ட விரோதமாக நிர்வாகி பாதிரியார் தாமஸ் அடைத்து வைத்துள்ளார்.

மேலும் சுகாதாரமற்ற முறையில் கருணை இல்லத்தை நடத்தி வருகிறார்” என்று கூறப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் சாலவாக்கம் போலீசார் பாதிரியார் தாமஸ் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாதிரியார் தாமஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

கருணை இல்ல நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News