செய்திகள்

ரஜினி, கமல்ஹாசனுக்கு அரசியல் அறிவு இல்லை- ராமதாஸ்

Published On 2018-03-19 11:03 IST   |   Update On 2018-03-19 11:03:00 IST
ரஜினி காந்திற்கும் கமல் ஹாசனுக்கும் துளியும் அரசியல் அறிவு இல்லை என காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் உச்சக்கட்ட ஊழல் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு ஊழல் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே முழுமையாக மக்களிடம் கொண்டு செல்கின்றது.

தமிழக அரசின் ஊழல்கள் குறித்து கவர்னரிடம் பா.ம.க. சார்பில் இரண்டு முறை மனு அளிக்கப்பட்டது. அதனை உன்னிப்பாகப் படித்த கவர்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆந்திராவில் நேர்மையான ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் மத்திய அரசினை தைரியமாக எதிர்க்க முடிகின்றது. ஆனால் தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதனால் மத்திய அரசினை எதிர்க்க முடியவில்லை.

தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

இந்தக் காஞ்சி மண்ணிலே பிறந்த அறிஞர் அண்ணா மதுவினால் வரும் பணம் அரசுக்கு தேவையில்லை என உறுதியாக இருந்தார் ஆனால் அவர் வழியிலே செல்வதாகக் கூறும் தி.மு.க.தான் தமிழகத்திற்கு மதுவினை அறிமுகப்படுத்தியது.

எம்.ஜி.ஆர். மதுக்கடைகளை அதிகப்படுத்தினார். ஜெயலலிதா அரசாங்கமே மதுவினை விற்கும் நிலைக்கு கொண்டு வந்தார், ஆனால் அறிஞர் அண்ணாவின் கொள்கையினை பா.ம.க. மட்டுமே கொண்டுள்ளது.

குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். விஜயகாந்த் அரசியலில் இருந்து காணாமல் போய் விட்டார்.

ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்றப் போவதாகக் கூறுகின்றனர். இவர்களால் எந்த மாற்றத்தினையும் கொண்டு வர முடியாது.

தினகரன் ஹவாலா பணத்தில் சுற்றி வருகின்றார். இவர்களால் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை.

நல்ல ஆட்சியினை பா.ம.க. வினால் மட்டுமே தர முடியும். காவிரி விவகாரத்தில் ராஜினாமா என்பது தேவையில்லை, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

Similar News