செய்திகள்

அரியலூர் அருகே பெண் எஸ்.ஐ. தாக்கியதால் வாலிபர் தற்கொலை

Published On 2018-02-27 17:27 IST   |   Update On 2018-02-27 17:27:00 IST
அரியலூர் அருகே பெண் எஸ்.ஐ. தாக்கியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 33). நேற்றிரவு இவர் அப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ் பெக்டர் காயத்ரி, சின்னதுரையை மறித்து வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டார். அப்போது சின்னதுரை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை எச்சரித்த, சப்- இன்ஸ்பெக்டர் காயத்ரி, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற சின்னதுரை, நடந்த சம்பவம் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்து விட்டு தூங்கி விட்டார். இன்று காலை எழுந்து பார்த்தபோது சின்னதுரையை காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய போது, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் சின்னதுரை பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சிய டைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

மேலும் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரும்புலிக்குறிச்சி,- உடையார்பாளையம் சாலையில் திரண்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த தும் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சப்- இன்ஸ்பெக்டர் காயத்ரி, சின்னதுரையை அவதூறாக பேசி தாக்கியதால்தான் மன முடைந்து சின்னதுரை தற்கொலை செய்துள்ளார்.

எனவே எஸ்.ஐ.காயத்ரியை கைது செய்ய வேண்டும் என்று புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய விசாரணை நடத்துவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சின்னதுரை உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்கொலை செய்த சின்னதுரைக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். நேற்று ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Similar News