செய்திகள்

தா.பழூர் அருகே ஊருக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

Published On 2018-02-19 16:44 GMT   |   Update On 2018-02-19 16:44 GMT
தா.பழூர் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை கிராம மக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த தென்கச்சி பெருமாள்நத்தம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் நிறைந்த இப்பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொள்ளிட ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை பராமரிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் சிலர் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது கரைபகுதிக்கு எதிர்புறத்தில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை நோக்கி 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று வருவதை பொதுமக்கள் பார்த்தனர்.

இதில் அச்சமடைந்த அவர்கள் கிராமத்திற்குள் சென்று ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் விரைந்து வந்து முதலையை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து தா.பழூர் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தா.பழூர் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இளைஞர்கள் பிடித்து கட்டி வைத்திருந்த முதலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தா.பழூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கொள்ளிட ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இந்த பகுதியில் இன்னும் அதிக முதலைகளை பார்த்ததாக கிராம மக்கள் கூறுகிறார்கள். கிராம மக்கள் தங்களது கால்நடைகளை இந்த ஆற்றில் தான் குளிப்பாட்டுவார்கள், மேலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் விடுவார்கள். பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியாக இருப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்கள் அச்சத்தை போக்க வேண்டும். அணைக்கரை ஆற்றில் அதிகளவு முதலைகள் இருப்பதால், அங்கிருந்து உணவு கிடைக்காமல் அங்கு இருந்து இடம் பெயர்ந்து வருகின்றன. எனவே முதலைப்பூங்கா அமைத்து முதலைகளை பாதுகாப்பதோடு மட்டும் அல்லாமல், மக்கள் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று கூறினர். #tamilnews
Tags:    

Similar News