செய்திகள்
அரியலூர் அருகே பல்கலைக்கழக பி.எச்.டி. மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வி.ஏ.ஓ. கைது
பல்கலைக்கழக பி.எச்.டி. மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வி.ஏ.ஓ. சென்னையில் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துசேர்வாமடம் கிராமம் பெரியத்தெருவை சேர்ந்தவர் புஷ்பா (வயது 30). இவர் பட்டபடிப்பு முடித்துவிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். இவருக்கும் தற்போது முத்துசேர்வாமடம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் செல்வராசு (37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
செல்வராசுவிற்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதனை மறைத்து புஷ்பாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் புஷ்பா குடும்பத்தினருடன் சேர்ந்து வாழலாம் என செல்வராசுவிடம் தெவித்துள்ளார். குடும்பத்தினருடன் சேர்ந்தால் தனது குட்டு உடைந்து விடும் என அஞ்சிய செல்வராசு புஷ்பாவை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கு மிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் செல்வராசுவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் புஷ்பாவிற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தால் செல்வராசு புஷ்பாவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதில் மனமுடைந்த புஷ்பா கடந்த 5 மாதத்திற்கு முன்பு கழுத்தில் கட்டிய தாலியை அறுத்து எறிந்ததோடு, வீட்டின் அருகில் உள்ள முந்திரி தோப்பில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து புஷ்பாவின் தாய் சுகுணாவதி, மகளின் சாவில் மர்மம் இருப்பதாக மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வி.ஏ.ஓ. செல்வராசு, புஷ்பாவை தற்கொலைக்கு தூண்டியதோடு, அவர் தலைமறைவானதும் தெரியவந்தது.
அவரை கைது செய்வதற்காக தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் செல்வராசு சென்னை குன்றத்தூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சென்னை சென்று அங்கு பதுங்கி இருந்த வி.ஏ.ஓ. செல்வராசுவை கைது செய்தனர். 6 மாதத்திற்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். #tamilnews