செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

Published On 2018-02-10 22:49 IST   |   Update On 2018-02-10 22:49:00 IST
நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கோவில்பத்து, தலைஞாயிறு, அருந்தவம்புலம், ஈசனூர், தலையாமழை ஆகிய இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், அருந்தவம்புலத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கையும் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் சுரேஷ்குமார், நெல் தூற்றும் எந்திரத்தை பார்வையிட்டு சரியாக இயங்குகிறதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து நெல்லில் கற்கள், பதர்கள் இல்லாமலும், நெற்களை தூற்றுமாறும் கூறினார். பின்னர் ஈரப்பதம் சோதனை செய்யும் கருவியினை ஆய்வு செய்து, ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு அதிகமாக இருக்க கூடாது எனவும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், பணியாளர்கள் கவனமுடனும், பொறுப்புடனும் பணியாற்றவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகரன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர். #tamilnews

Similar News