செய்திகள்
குடிநீர் கேட்டு செந்துறையில் 2 இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி குழந்தைகள் பூங்காத்திடல் பகுதியில் 1 ஆண்டாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்பட வில்லை. இது குறித்து பலமுறை பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சை ஏற்க மறுத்த பொதுமக்கள் சம்மந்தபட்ட அதிகாரிகள் வந்த பின்னரே சாலை மறியல் போராட்டத்தை கை விடுவோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் வளர்ச்சி துறையினர் இன்னும் 1 மணி நேரத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கான்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டகாரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று அங்கு பழுதாக மின் மோட்டாரை சரி செய்தனர். இதனை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த போராட்டத்தால் அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் தெற்க்குபட்டியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தங்களது 100 நாள் அட்டையை சாலை கட்டி தொங்க விட்டு செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் செந்துறை ஜெயங் கொண்டம் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews