செய்திகள்
ஆலங்காட்டில் சவுடு மண் குவாரி அமைக்கக் கூடாது: கிராம மக்கள் எதிர்ப்பு
சீர்காழி அருகே ஆலங்காடு ஊராட்சியில் சவுடுமண் குவாரி அமைந்தால் சாலைகள் பழுது ஏற்படுவதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என ஆர்.டி.ஓ.விடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு ஊராட்சியைச் சேர்ந்த இளந்தோப்பு கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியாருக்குச் சொந்தமான சவுடு மண் குவாரி அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிகிறது. இதனை மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்.டி.ஓ.விடம், சவுடு மண் குவாரி அமைத்தால், இங்கிருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் போக்குவரத்தால் எடமணல் கிராமத்திலிருந்து புதுப்பட்டினம் செல்லும் கிராமச் சாலை பாதிக்கப்படுவதுடன் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும், சுற்றுப்புறச் சுகாதாரமும் பாதிக்கும்.எனவே சவுடு மண் குவாரி அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.