செய்திகள்

மயிலாடுதுறை அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 2 பேர் கைது

Published On 2018-01-30 15:27 IST   |   Update On 2018-01-30 15:27:00 IST
மயிலாடுதுறை அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு, தெற்குகாரு குடியை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி அரும்புஅம்மாள் (வயது 75). இவர் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அவர் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கொலையாளிகள் அரும்புஅம்மாளை கொலை செய்து அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இதில் அரும்பு அம்மாளை கொலை செய்து நகை பறித்தவர்கள் கடலங்குடியை சேர்ந்த முருகன் மகன் பாலாஜி, (வயது 19), அவரது நண்பர் பந்தநல்லூரை சேர்ந்த முனியாண்டி மகன் பிரபு (38) என்று தெரியவந்தது. அவர்களை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கொலையாளி பாலாஜி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

அரும்புஅம்மாளை எனக்கு தெரியும். அவர் நகை அணிந்து தனியாக வசித்து வந்ததால் அவரை கொலை செய்து நகைபறிக்க திட்டமிட்டேன். இதுபற்றி எனது நண்பர் பிரபுவிடம் கூறினேன். அவரும் என்திட்டத்துக்கு ஒப்பு கொண்டதால் இருவரும் சேர்ந்து சம்பவத்தன்று அரும்புஅம்மாள் அணிந்திருந்த நகையை பறித்தோம். அவர் என்னை காட்டி கொடுத்துவிடுவார் என்று எனக்கு அச்சம் ஏற்பட்டதால் வீட்டில் இருந்த குத்துவிளக்கால் அரும்புஅம்மாள் கழுத்தில் குத்தி கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews

Similar News