நாகை- கடலூரை கலக்கிய பிரபல ரவுடி கைது
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் என்கிற வெள்ளப் பள்ளம் வினோத் (வயது 35).
இவர் கடந்த 2012-ம் ஆண்டில் பூம்புகார் மேலையூரில் தி.மு.க. பிரமுகர் முத்து ராஜேந்திரனை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு, சென்னையில் பிரபல துணிக்கடையில் கொள்ளையடித்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் நாகை- கடலூர் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் வினோத் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கொள்ளை வழக்கில் வினோத் ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் அவர் கோர்ட்டில் அவர் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் சீர்காழியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சிதம்பரத்தில் இருந்து சீர்காழிக்கு நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கொள்ளிடம் பாலம் வல்லம்படுக்கை என்ற இடத்தில் வந்த போது அங்கு நின்ற ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத் , மோட்டார் சைக்கிளை மறித்தார். பின்னர் வெற்றிவேலை தாக்கி அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் , மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பினார்.
இதுபற்றிய கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நாகை- கடலூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். இதை கவனித்த போலீசார் அவரை விரட்டி பின்தொடர்ந்தனர்.
இதனால் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாததால் வினோத், பாலத்தில் இருந்து குதித்தார். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கீழே குதித்த வினோத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வினோத்தை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத் என தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சீர்காழி பகுதியில் பிரபல ரவுடி போலீ சாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.