செய்திகள்

ரூபிக் கியூப் புதிர் போட்டி: சென்னையில் புதிய கின்னஸ் சாதனை

Published On 2018-01-29 09:54 GMT   |   Update On 2018-01-29 11:20 GMT
மிக அதிகமானவர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி ரூபிக் கியூப் புதிரை விடுவித்து, புதிய உலக சாதனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி சென்னையில் நடந்தேறியது.
சென்னை:

கன சதுரங்களின்மீது வெவ்வேறு நிறங்களிலான ஸ்டிக்கர்களை ஒட்டி ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் கடந்த 1974-ம் ஆண்டில் கன சதுர (Cube) வடிவிலான ஒரு புதிர் விளையாட்டுப் பொருளை உருவாக்கினார்.

முதலில் தனது மாணவர்களிடமும் நண்பர்களிடமும் எர்னோ ரூபிக் இதை அறிமுகப்படுத்தினார். முதன்முதலில் பொலைட்செனிகா என்னும் நிறுவனம் ரூபிக் கன சதுரத்தைத் தயாரித்து வர்த்தகரீதியாக விநியோகித்தது.

1979-ம் ஆண்டு நுரெம்பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் இந்த புதிர் விளையாட்டுப் பொருள் இடம்பெற்றது. அந்த கண்காட்சிக்கு வந்திருந்த டாம் க்ரெமெர் என்பவர் இந்த விளையாட்டுப் பொருளை உலகம் முழுவதிலும் சந்தைப்படுத்த எர்னோ ரூபிக்-கின் ஒப்புதலை பெற்றார்.

எர்னோ ரூபிக் நினைவாக ‘ரூபிக் க்யூப்’ என்ற பெயரில் இந்த விளையாட்டுப் பொருள் கடந்த 1980-ம் ஆண்டு உலகச் சந்தையில் விற்பனைக்கு வந்ததுடன் அதே ஆண்டில் ஜெர்மனி நாட்டின் சிறந்த விளையாட்டுக்கான விருதையும் பெற்றது.

அனைத்து நிறங்களை கொண்ட கன சதுர கட்டங்களையும் முறையாக ஒழுங்குப்படுத்தி ரூபிக் கியூப் புதிரை விடுவிப்பதில் நிமிடங்களையும் கடந்து வினாடிகள் கணக்கில் பல்வேறு உலக சாதனைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரே இடத்தில் மிக அதிகமானவர்கள் ஒன்றுகூடி ரூபிக் கியூப் புதிரை விடுவித்து, புதிய உலக சாதனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தேறியது.


சென்னை பெரம்பூர், கொளத்தூர், அயனாவரம் பகுதிகளில் இயங்கிவரும் கலிகி ரங்கநாதன் மான்போர்ட் பள்ளியை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து கடந்த 27-1-2018 அன்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினர்.

ஒரே இடத்தில் மிக அதிகமானவர்கள் ஒன்றுகூடி ரூபிக் கியூப் புதிரை விடுவித்த இந்த புதிய சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News