செய்திகள்
தமிழகத்தில் 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
தமிழகத்தில் 43 ஆயிரம் மையங்கள் மூலம் 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அடுத்த தவணையாக மார்ச் 11-ந் தேதி வழங்கப்படுகிறது.
சென்னை:
போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் காரணமாக குழந்தைகளின் கை, கால்களை நிரந்தரமாக செயலிழக்க செய்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் ஒரேநேரத்தில் சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் இந்தியாவிலிருந்து போலியோ நோயை அறவே ஒழிக்க முடியும் என்ற வகையில் போலியோ சிறப்பு முகாம்கள் நாடுமுழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நாடு முழுவதும் நடந்தது.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் இருந்து 5 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு உதவி சுகாதார அதிகாரி விஜய சாமூண்டீஸ்வரி அழைத்து சென்றார். இவர்கள் உள்பட அங்கிருந்த அனைத்து குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சர் சொட்டு மருந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர் விஜயலட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கோயம்பேடு, பிராட்வே, தியாகராயநகர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டன. அதேபோல ரெயில் நிலையங்களிலும் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டன.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் முதன்மை சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. அதேபோல சென்டிரல் உள்பட முக்கிய ரெயில் நிலையங்களிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அந்தவகையில் பஸ்-ரெயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், சுங்கச்சாவடிகள், விமான நிலையங்கள் என 1,652 பயணவழி மையங்கள் சொட்டு மருந்து வழங்குவதற்காக நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தவிர 1,000 நடமாடும் குழுக்கள் மூலம் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டன. இதில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொட்டு மருந்து வழங்குவதற்காக மொத்தம் 1,640 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதுதவிர நடமாடும் முகாம்களும் களத்தில் இறக்கப்பட்டன. அடையாறு மண்டலத்தில் உதவி சுகாதார அதிகாரி விஜய சாமூண்டீஸ்வரி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் புகழேந்தி உள்பட மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக தேடிச்சென்று, ‘இன்று சொட்டு மருந்து வழங்கும் தினம், சொட்டு மருந்து குழந்தைகள் யாராவது உள்ளார்களா?’ என்று கேட்டு சொட்டு மருந்து வழங்கினர். நேற்று அடையாறு மண்டலத்தில் 137 போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சென்னையில் பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களிலும் சொட்டு மருந்து முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அந்தவகையில் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி தேவாலயம், சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை தேவாலயம், ஏ.ஜி.தேவாலயம் உள்பட தேவாலயங்கள் முன்பும், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் உள்பட முக்கிய கோவில்கள் முன்பும் நேற்று சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த முகாம்களில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுடைய குழந்தைகள் என மொத்தம் 66 லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது 93 சதவீதம் ஆகும். சொட்டு மருந்து வழங்கப்படும்போதே, குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.
இதுதவிர நேற்று மாலை 4 மணியில் இருந்தே நடமாடும் குழுக்கள் ஒவ்வொரு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். போலியோ சொட்டு மருந்து அடுத்த தவணையாக மார்ச் 11-ந் தேதி வழங்கப்படுகிறது. #tamilnews