செய்திகள்

தேவகோட்டையில் 2 கடைகளில் கொள்ளை

Published On 2017-12-31 16:41 IST   |   Update On 2017-12-31 16:41:00 IST
தேவகோட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவகோட்டை:

தேவகோட்டை ஆண்டவர் செட் அருகே தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் உள்ளது. இதன் உரிமையாளர் காளிமுத்து மற்றும் ஊழியர்கள் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.

இன்று காலை கடையை திறக்க முயன்றபோது ‌ஷட்டர் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே போய் பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ. 16 ஆயிரம் மற்றும் 15 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இந்த கடைக்கு 100 அடி தூரத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையிலும் பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பணம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது குறித்து எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கண்ணன், டிபார்ட்மெண் டல் கடை உரிமையாளர் காளிமுத்து ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட 2 கடைகளும் திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் உள்ளது. இது திருடர்களுக்கு சாதகமாக உள்ளது.

ஏற்கனவே தேவகோட்டை பகுதியில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தவர்கள் தற்போது வணிக நிறுவனங்களிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News