செய்திகள்

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 70.87 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்

Published On 2017-12-28 22:10 IST   |   Update On 2017-12-28 22:10:00 IST
விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தொண்டைமான் நல்லூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.87,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டுக் கொட்டகை கட்டுமானப் பணியையும், ரூ.1 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் குப்பை பிரிக்கும் கூடாரம் அமைக்கும் பணியையும், மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி கட்டுமானப் பணியையும், குமாரமங்களம் ஊராட்சி, வடுகப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட கட்டு மானப்பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மண்டையூர் ஊராட்சி, நத்தக்காடு கிராமத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.25  லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியையும், நத்தக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆண்கள் கழிப்பறை கட்டுமானப் பணியையும், மண்டையூரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காத்திருப்போர் கொட்டகை கட்டுமானப் பணியையும், ஊராட்சி மன்ற வளாகத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளையும், மண்டையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டு மானப்பணியையும், சிங்கத்தா குறிச்சியில் ரூ.4  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் கட்டுமானப் பணியையும் என மொத்தம் ரூ.70.87 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மரக்கன்றுகளை தினமும் நீர் ஊற்றி பராமரிக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்தவும், மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை முறையாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யவும், முடிவுற்றப் பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், மேலும் நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், உதவிப்பொறியாளர்கள் சித்திரவேல்,  முத்துகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News