செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் கரும்பு அறுவடை தீவிரம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு குறைவான அளவிலே கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் கரும்பு விலை உயரும் சூழல் உள்ளது.
அறந்தாங்கி:
பொங்கல் பண்டிகை என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது தித் திக்கும் செங்கரும்புதான். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை எதிர் பார்த்து கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவ மழை பெய்யாததாலும், கடும் வறட்சி நிலவியதாலும் தண்ணீர் இல்லாமல் கரும்பு விவசாயத்தை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர். இதனால் கரும்பு விலையும் கடுமையாக உயர்ந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் கரும்பு பயிரிடப்படுவது வழக்கம். போதிய தண்ணீர் இல்லாததாலும், உரிய விலை கிடைக்காததாலும், தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்காமல் இருப்பதாலும் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் போதிய ஆர்வம் காட்டவில்லை.
இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த அள வில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் மட்டும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும் பொங்கல் பண்டிகையின் போது தான் அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
புதுகை மாவட்டத்தில், ஆலங்குடி, கறம்பக்குடி, அறந் தாங்கி, அரசர்குளம், பொன்னமராவதி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்புகள் செழித்து வளர்ந்துள்ளது. தற்போது சில பகுதிகளில் கரும்பு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, வயலுக்கே வந்து கரும்புகளை கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொங்கல் பொருட்களுடன் கரும்பு துண்டும் வினியோகம் செய்யப்படுகிறது. அதற்காக, கூட்டுறவு துறை அதிகாரிகள் கரும்புகளை நேரடியாக, கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு குறைவான அளவிலே கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் கரும்பு விலை உயரும் சூழல் உள்ளது. கடும் வறட்சியால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு கரும்பு பயிராவது இனிக்க வைக்குமா என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.