செய்திகள்
ஆளுநரின் பாதுகாப்புக்கு சென்று திரும்பிய வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பாதுகாப்பிற்கு சென்று திரும்பிய வாகனம் மாமல்லபுரம் அருகே பாதசாரிகள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மாமல்லபுரம்:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவரது பாதுகாப்புக்காக சென்ற போலீசார் பணியை முடித்துக்கொண்டு இன்று மாலை வாகனத்தில் புறப்பட்டு வந்தனர். மாமல்லபுரம் அருகே உள்ள புதுகல்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது, அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சுரேஷ் (35),அவரது மகன் கார்த்திகேயன் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு மூதாட்டி பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த ஆளுநர் மாளிகை, ஆளுநரின் பாதுகாப்பு பணிகளை முடித்துக்கொண்டு திரும்பிய போலீஸ் வாகனம்தான் மோதியதாக விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநரின் ஆய்வுப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடலூரில் இன்று ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பன்வாரிலாலுக்கு தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.