செய்திகள்
அனுமதியின்றி மணல் அள்ளிய 15 மாட்டு வண்டிகள் பறிமுதல்
அறந்தாங்கி அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 15 மாட்டு வண்டிகளை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
அறந்தாங்கி:
தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் அள்ள கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அனுமதியின்றி ஆற்று மணலை திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியா நிலை பகுதியில் தாசில்தார் ரவிச்சந்திரன் ரோந்து மற்றும் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டு வரப்பட்டது. அவற்றை மறித்து விசாரணை நடத்திய தாசில்தார் ரவிச்சந்திரன் 15 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.
பின்னர் அவை அறந்தாங்கி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாகவே அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மணல் திருட்டை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.