குப்பை கிடங்காக மாறிய பல்லாவரம் ஏரி: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சென்னை:
பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில் பல்லாவரம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகிலேயே ஜி.எஸ்.டி. ரோடு உள்ளது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சி அளிக்கும் இந்த ஏரி பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி பரிதாபமாக காட்சி அளிக்கிறது. அதோடு பக்கத்தில் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் குவியும் குப்பைகளும் தினமும் லாரி லாரியாக இந்த ஏரிக்குள் கொட்டப்படுகிறது.
பல அடி உயரத்துக்கு மலைபோல் குப்பைகள் குவிந்து ஏரியின் பெரும்பகுதி குப்பைக்கிடங்காக மாறி விட்டது. தண்ணீர் வெளியேறும் கால்வாயும், வரத்து கால்வாயும் காணாமல் போய்விட்டன.
தற்போது பெய்து வரும் மழையால் ஏரிக்குள் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்குகிறது. இந்த ஏரிப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது, “கால்வாய் காணாமல் போய்விட்டது.
இப்போது ஏரியையும் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை தூர்வாரி பராமரித்தால் பல மாதங்கள் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையும் தீரும்” என்றனர்.
பொதுமக்கள் படும் ஆதங்கம் புரிகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் கண்களுக்கு தெரியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.