செய்திகள்

மழைக்கால உணவு பாதுகாப்பு: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2017-11-08 15:06 IST   |   Update On 2017-11-08 15:06:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மழை காலங்களில் உணவு பொருட்களை பாதுகாப்பதை குறித்து கலெக்டர் அறிவுரை கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மழை காலங்களில் உணவு பாதுகாப்பு மேலாண்மை சம்பந்தமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின் வருமாறு:-

பொதுமக்கள் குளோரினேற்றம் செய்யப்பட்ட மற்றும் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். ஐ.எஸ்.ஐ. தர முத்திரை மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும். உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட சூடான உணவை உட் கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருளை பாதுகாப்பான முறையில் மூடி பயன்படுத்த வேண்டும். சமைக்கும் முன்பு காய்கறிகளை சுத்தமான உப்புநீரில் கழுவி பயன் படுத்த வேண்டும்.

மேலும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். உலர் திராட்சை, வறுத்த முந்திரி, கடலை வகைகள், பிஸ்கட்டுகள், பால் பவுடர்கள், ரஸ்க் போன்ற போதுமான அளவு உணவு பொருட்களை சேமித்து உட்கொள்ளவேண்டும். சமைத்த உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவு தயாரிக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும் சோப்பு போட்டு சுத்தமாக கை கழுவ வேண்டும். சாலையோரம் விற்கப்படும் உணவுகளை சாப்பிட கூடாது.

எளிதில் கிருமி தொற்று ஏற்படக்கூடிய அசைவ உணவு பொருட்களை சுத்தமாக கழுவிய பின்பு உயர் கொதிநிலை அடைந்த பின்பே உணவாக பயன் படுத்த வேண்டும். உணவு உபாதைகள், வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் கஞ்சி வகைகளை நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உட்கொள்ள வேண்டும். உணவு மற்றும் உணவுப்பொருட்கள் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News