செய்திகள்

மழையால் 5 ஏக்கர் பயிர்கள் மூழ்கியது: காதில் வி‌ஷம் ஊற்றி விவசாயி தற்கொலை முயற்சி

Published On 2017-11-08 07:13 GMT   |   Update On 2017-11-08 07:13 GMT
கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை கண்ட சீர்காழழி விவசாயி காதில் வி‌ஷத்தை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:

நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தில் சுமார் 1½ லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வங்கியில் கடன் வாங்கி பயிரிட்டுள்ள விவசாயிகள், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இனி சம்பா பயிரை காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்குறியுடன் தினமும் வயலை பார்வையிட்டு செல்கிறார்கள்.

இந்த நிலையில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை கண்ட சீர்காழழி விவசாயி காதில் வி‌ஷத்தை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 65). விவசாயியான இவர் அப்பகுதியில் 5 ஏக்கரில் சம்பா பயிரிட்டு இருந்தார்.

தற்போது கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் அவரது வயலில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அவர் கவலைப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கலியமூர்த்தி நேற்று வயலை பார்க்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கியப்படி பயிர்கள் சாய்ந்து கிடந்ததால் மிகவும் மனமுடைந்தார். இனிமேல் பயிர்களை காப்பாற்ற வழியில்லை என வேதனைப்பட்டார்.

அப்போது துக்கம் தாளாமல் தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை கலியமூர்த்தி காதில் ஊற்றினார். சிறிதுநேரத்தில் வயலிலேயே மயங்கி விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த விவசாயிகள், கலியமூர்த்தி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விவசாயி தற்கொலை முயன்ற சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News