திருமருகலில் மழை: பள்ளியில் தங்கி இருக்கும் பொதுமக்கள்
திருமருகல்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் கடந்த ஒருவாரமாக பெய்த தொடர் கன மழையால் 10-ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து சில இடங்களில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. திருமருகல் பகுதியில் உள்ள குளங்களில் அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டி மண் எடுத்ததால் குளத்தின் கரைகள் மண் சரிந்து கரைகள் சேதமாயின. தாமரைக் குளம், ஆயாக்குளம் கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் அபாய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து. அப்பகுதி மக்கள் திருமருகல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். அரசினர் மேல் நிலைப் பள்ளியில் தங்கியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு மழைநீர் விரைவாக வடிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.