செய்திகள்

அழிஞ்சியாறு வாய்க்கால் தூர் வாராததால் 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின

Published On 2017-11-06 15:26 IST   |   Update On 2017-11-06 15:26:00 IST
தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக நடவு வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர் மூழ்கி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அழிஞ்சியாறு பாசன வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் குன்னம், பெரம்பூர், மேலமாத்தூர், எலத்தூர், கீழமாத்தூர், கீரங்குடி, சிதம்பரநாதபுரம் உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 5 வருட காலமாக இந்த பாசன வாய்க்கால் தூர்வாரி ஆழபடுத்தாமல் விடப்பட்டதால், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.

இவ்வாய்காலில் இருந்து பிரிந்து செல்லும், சம்பா குத்துவடிகால், வாழப் பள்ளம் வாய்க்கால் ஆகிய இரண்டு வடிகால் வாய்கால்களும் கடந்த 15 வருடங்களாக தூர்வாரப் படவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக நடவு வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர் மூழ்கி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா நடவு பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ராசெல்வி விஸ்வநாதன் கூறியதாவது:-

அழிஞ்சியாறு பல கிராமங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலாகவும், வடிகாலாகவும் இருந்து வருகிறது. இது குன்னம் வழியாக சென்று குத்தவக் கரை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்காலை கடந்த 5 வருட காலமாக தூர்வாரவில்லை. இதனால் மழை நீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், தூர்வார வில்லை. அதிகாரிகள் மெத்தனத்தால் சம்பா பயிர் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக அழிஞ்சியாறு பாசன மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News