செய்திகள்

சென்னையில் 20 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது

Published On 2017-11-02 13:08 IST   |   Update On 2017-11-02 13:08:00 IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 20 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சென்னை:

சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

முக்கிய சாலைகளிலும் தெருக்களிலும் மழை தண்ணீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் நிரம்பி வழியும் நிலையைக் கண்டு 2015-ம் ஆண்டு ஏற்பட்டது போன்ற பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் சென்னை புறநகர் பகுதி மக்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக ஓட்டேரி, கொருக்குப்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஆவடி, முடிச்சூர் பகுதிகளில் வெள்ள சேதம் அதிகமாக உள்ளது.

இந்த பகுதிகளில் மழை வெள்ள சேதத்தை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளில் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 20 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 பகுதிகளில் இந்த வீடுகள் உள்ளன.

ஆவடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, கெல்லிஸ், செகரட்டரியேட் காலனி, பட்டாபிராம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், பகுதிகளில் நிறைய வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்தகைய வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி விட்டனர்.

பலர் வீட்டின் மாடிகளில் சென்று தங்கி உள்ளனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர இயலாமல் தவித்தப்படி உள்ளனர். அடையாரிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ராயப்பா நகர், மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர், வரதராஜ புரம் பகுதிகளில் குடிநீருடன் சாக்கடை கலந்து விட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

Similar News