சிதம்பரத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சிதம்பரம் பொய்யாபிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் கடந்த மாதம் 26-ந் தேதி ஓமக்குளம் கீழக்கரையைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது37) நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அவரை உசுப்பூர் அம்மாபேட்டையைச்சேர்ந்த சிவா என்ற சிவராஜ்(21) வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்தார்.
இது தொடர்பாக சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தார்.
சிவா தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சிவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி சிவா குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதேப்போல் கடந்த 7-ந்தேதி பரங்கிப்பேட்டையில் ஜாகிர்உசேன் என்பவரை பி.முட்லூர் மேட்டுத்தெருவைசேர்ந்த கனகராஜ்(32) என்பவர் வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்தார்.
இது தொடர்பாக கனகராஜை பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் கைது செய்தார். கனகராஜ் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. இதனால் அவரை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்ய உத்தரவிடு மாறு கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கனகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கனகராஜை கைது செய்யப்பட்டார்.