செய்திகள்

நதிநீர் இணைப்பே காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் ஓட வழிவகுக்கும்: இல.கணேசன்

Published On 2017-09-15 16:27 IST   |   Update On 2017-09-15 16:27:00 IST
நதிகளை இணைத்தால் காவிரியில் நிரந்தரமாக தண்ணீர் ஓட வழிவகுக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான இல.கணேசன் கூறினார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான இல.கணேசன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

பாரத நாட்டின் பாரம்பரியத்தில் தீர்த்தவாரி உற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது. கும்பமேளா, மகாமகம் போன்று காவிரி மஹா புஷ்கரம் விழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவுக்காக செயற்கையாக தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஓரிரு நாட்கள் முன்னதாக மேட்டூரில் தண்ணீர் திறந்திருந்தால் விழா இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். காவிரி நதியில் தண்ணீர் நிரந்தரமாக ஓடுவதற்கு நதி நீர் இணைப்பே சிறந்த வழியாகும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதிகளோடு காவிரி மற்றும் தாமிரபரணி உள்ளிட்ட ஏனைய நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் விவசாயம் செழிப்படையும்.

பெட்ரோ கெமிக்கல் திட்டம் காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டதாகும். அதைத் தான் தற்போதைய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இருப்பினும் இத்திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்றால் அரசு அதனை பரிசீலிக்கும். சேது சமுத்திர திட்டத்தை கொள்கை ரீதியாக அறிவித்தவர் வாஜ்பாய். ராமர் பாதத்திற்கு சேதமில்லாமல் சேது சமுத்திர திட்டம் அமுல்படுத்தப்படும்.


சாரணர் பயிற்சிக்கு தேவை தேசபக்தி, கட்டுப்பாடு. ஹெச்.ராஜாவுக்கு உள்ள தேச பக்தி, கட்டுப்பாடு வேறு எந்த உறுப்பினருக்கு இருக்கிறது என தெரியவில்லை. குற்றம் சாட்டுபவர்கள் ஆத்ம சோதனை செய்து பார்க்கவேண்டும். தமிழக அரசின் செயல்பாடே இனிதான் தொடங்கும். இப்போது ஆட்சியை பற்றியும், மக்களை பற்றியும் கவலைப்படுவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது. முழுநேரம் செயல்படுவார்கள் என நம்புகிறேன். தி.மு.க. செயல் தலைவர் கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. பக்குவமாக பேசவேண்டும். கெடு கொடுக்கிறேன் என்பது ஒரு எதிர்கட்சி தலைவர், ஆளுநரை பார்த்து சொல்லக்கூடிய வி‌ஷயம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சேதுராமன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில்பாலு, நகர தலைவர் மோடி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News