செய்திகள்

குடிக்க பணம் கிடைக்காததால் உடலில் வெந்நீரை ஊற்றி தற்கொலை செய்த தொழிலாளி

Published On 2017-09-08 22:13 IST   |   Update On 2017-09-08 22:13:00 IST
பவானி அருகே குடிக்க தாய் பணம் தராததால் உடலில் வெந்நீரை ஊற்றி கொண்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பவானி:

பவானி அடுத்த குட்ட முனியப்பன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பவழாயாள் (வயது65). இவரது கணவர் செம்மனன். இவர்களது மகன் கோபால கிருஷ்ணன் (42).

செம்மனன் இறந்து விட்டார். கோபால கிருஷ்ணன் கேரள மாநிலம் மன்னார் காட்டில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கோபால கிருஷ்ணன் கடந்த 3-ந் தேதி பவானியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கேயே தங்கி இருந்தார். சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் தன் தாயிடம் குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இரவு பவழாயாள் தூங்க சென்று விட்டார். திடீரென கோபால கிருஷ்ணன் அலறல் சத்தம் கேட்டு பவழாயாள் கண் விழித்து பார்த்தார்.

அப்போது கோபால கிருஷ்ணன் தனது உடலில் சுடுதண்ணீரை ஊற்றி கொண்டு உயிருக்காக போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கோபால கிருஷ்ணனை கொண்டு சென்றனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கோபால கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News