செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் டெங்கு பீதி: மர்மகாய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலி

Published On 2017-09-05 21:27 IST   |   Update On 2017-09-05 21:27:00 IST
மர்ம காய்ச்சலுக்கு சிவகிரி பகுதியில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவகிரியில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலியாகி உள்ளான். சிவகிரி ஜீவா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35) மனைவி பெயர் கவிதா (29).

கணவன்-மனைவியும் விசைத்தறி தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்களின் மகன் தருண்நிதி (6). மகள் தரணி (3).

சிவகிரியில் உள்ள தனியார் பள்ளியில் தருண்நிதி 1-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் அடித்தது. இதனால் மகனை பெற்றோர் சிவகிரியில் சிகிச்சை அளித்து பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுவன் தருண்நிதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது அவனுக்கு டெங்கு நோய் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் டெங்கு நோய்க்கு அச்சிறுவன் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மர்ம காய்ச்சலுக்கு சிவகிரி பகுதியில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சிவகிரி பகுதியில் இதேபோல் சம்பவம் நடந்தது கிடையாது. இப்போது சிறுவன் ஒருவன் பலியாகி உள்ளான். இதனால் சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என சிவகிரி பகுதிமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News