செய்திகள்

அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்தால் இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Published On 2017-08-31 20:37 IST   |   Update On 2017-08-31 20:37:00 IST
ஓட்டுனர் உரிமம் தொலைந்தால் இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
கரூர்:

அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசின் உத்தரவு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதையொட்டி போலீஸ்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

முகாமில் ஆட்டோ, கார் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.

அடகு வைக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் முகாமில் டிரைவர்கள் தரப்பில் பேசியதாவது:-

அசல் ஓட்டுனர் உரிமத்தை எடுத்து செல்லும்போது தொலைந்து போனால் மீண்டும் பெறுவது கடும் சிரமமாகும். பஸ், ஆட்டோ டிரைவர்கள் பலர் ஓட்டுனர் உரிமத்தை உரிமையாளர்களிடம் கொடுத்து வைத்துள்ளனர். சிலர் கடனுக்கு பணம் வாங்கிய இடத்தில் ஓட்டுனர் உரிமத்தை அடகு வைத்துள்ளனர். இதனால், அதை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஓடும் அனைத்து வாகனங்களும் கணக்கெடுக்கப்பட்டு, அந்த வாகனங்களுக்குரிய சான்றிதழ்கள் போலீசாரால் சரிபார்க்கப்பட்டு அதற்கான முத்திரை வில்லையை வண்டியில் ஒட்ட வேண்டும். அந்த முத்திரை வில்லைக்கு குறிப்பிட்ட காலம் செல்லுபடியாகும் என நிர்ணயிக்க வேண்டும். இதுவரை ஓட்டுனர் உரிமம் எடுக்காதவர்கள் உரிமம் எடுக்கவும், புதுப்பிக்கவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

வாகன சோதனையின் போது ஓட்டுனர் உரிமத்தை போலீசார் பறித்து வைத்துக்கொள்ள கூடாது. ஓட்டுனர் உரிமம் தொலைந்து விட்டால் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தால் அதற்கான சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும். வயதான ஆட்டோ டிரைவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. 8-ம் வகுப்பு கல்வி தகுதியும் சிலரிடம் இல்லை. ஓட்டுனர் உரிமம் பெற்றிருந்தாலும் பலர் புதுப்பிக்காமல் உள்ளனர். இதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு பேசினர்.

இதேபோல நான்கு சக்கர வாகன உரிமையாளர்களும் தங்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இதற்கு பதில் அளித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பேசியதாவது:-

ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் புகார் தெரிவிக்க தனி இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஓட்டுனர் உரிமம் மட்டுமில்லாமல் பாஸ்போர்ட், வண்டியின் புத்தகம், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனாலும் இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம். அதற்கு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தவுடன் விரைவாக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெறாதவர்களுக்கு உரிமம் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அடகு வைத்த ஓட்டுனர் உரிமத்தை தர மறுத்தால் போலீசில் புகார் கொடுக்கலாம். பஸ், லாரி, கார் வாகன உரிமையாளர்கள் அனைவரும் டிரைவர்களிடம் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் தீபம்சங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக கரூர் டவுன் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வரவேற்று பேசினார்.

முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா நன்றி கூறினார்.

Similar News