செய்திகள்

நாகை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் கலெக்டர் அறிவிப்பு

Published On 2017-08-23 20:32 IST   |   Update On 2017-08-23 20:32:00 IST
நாகைப்பட்டினம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

களிமண்ணால் செய்யப்பட்டதும் சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது.

நாகப்பட்டினம்-வெட்டாறு (நாகூர் பாலம் அருகில்) மற்றும் புதிய கடற்கரை (வங்களா விரிகுடா கடற்கரை பகுதி) மயிலாடுதுறை-காவிரி ஆறு தரங்கம்பாடி-கடற்கரை (வங்களா விரிகுடா கடற்கரைபகுதி) பூம்புகார் -கடற்கரை (வங்களா விரிகுடா கடற்கரை பகுதி) ஆகிய இடங்களில் தான் சிலைகளை கரைக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விபரங்களுக்கு அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News