பழையாறு அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 5 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பழையாறு அருகே நண்டலாறு குறுக்கே சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு நேற்று இரவு தலைமை காவலர் ரமேஷ், ஏட்டு கண்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது பால்வண்டி என்ற போர்டுடன் வந்த டெம்போ வேனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது வேனை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உடன் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனையிட்டனர். அப்போது இருவரும் தப்பியோடினர். ஆனால் ஏட்டு கண்ணன் அவர்களில் ஒருவரை விரட்டி பிடிக்க முயன்றபோது அவரும் சட்டையை கழட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சட்டையில் லைசென்ஸ் மட்டும் இருந்தது.
இதையடுத்து வேனை சோதனையிட்டபோது அதில் 103 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி பொறையார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முருகவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது 103 அட்டை பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 148 மது பாட்டில்கள் வீதம் 4 ஆயிரத்து 944 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனுடன் மதுபாட்டில்களை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.