காஞ்சீபுரத்தில் விநாயகர் சிலைகளை கண்காணிக்க கேமிரா பொருத்த வேண்டும்: போலீசார் உத்தரவு
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு முகிலன், இன்ஸ்பெக்டர்கள் பழனி, பிரபாகர், மணிமாறன், வெற்றிச்செல்வன் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் கூறும் போது, ‘விநாயகர் சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
சிலை நனையாதவாறு தகறத்தால் மேற்கூரை அமைக்க வேண்டும். சிலைக்கு இரவும், பகலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது. சிலை பாதுகாப்பு குழுவினர் மது அருந்துபவர்களை சேர்க்க கூடாது. மேலும் சிலை வைக்கப்படும் இடத்தில் தீயணைப்பு சாதனங்கள் இருக்க வேண்டும். போலீசார் அனுமதியில்லாமல் சிலையை எடுத்துச் செல்லக்கூடாது.
ஊர்வலத்தின்போது கலர்பொடி தூவுதல், பட்டாசு வெடித்தல், மேளம் போன்றவைகளை பயன் படுத்தகூடாது. முக்கியமாக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்காணிப்பு கேமிராவை அவசியம் பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் வாசுதேவன், பிகாஷ் பங்கேற்றனர்.
காக்களூர் ஏரி (திருவள்ளூர்), எம்.ஜி.ஆர். நகர் ஏரி (திருவள்ளூர் டவுன்), கூவம் ஏரி (மப்பேடு), திருமழிசை குளம் (வெள்ளவேடு), ஊத்துக்கோட்டை குளம்,) சித்தேரி (பெரியபாளையம்), கொசத்தலை ஆறு (வெங்கல்).
காந்தி சாலை குளண் (திருத்தணி), வண்ணான்குளம் (ஆர்.கே.பேட்டை), கரீம்பேடுகுளம் (பள்ளிப்பட்டு), பாண்டரவேடு குளம் (பொதட் டூர்பேட்டை), பராசக்தி நகர் குளம் (திருவாலங்காடு).
கனகம்மாசத்திரம் குளம் (கனகம்மாசத்திரம்), ஏழுக்கண் பாலன் (கும்மிடிப்பூண்டி), பக்கிம்ஹாம் கால்வாய் (மீஞ்சூர்), பழவேற்காடு ஏரி (திருப்பாலைவனம்), கொசஸ்தலை ஆறு (சீமா வரம்) ஆகிய 17 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.