செய்திகள்

விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் காஞ்சீபுரத்தில் அரசு பஸ் ஜப்தி

Published On 2017-08-19 14:37 IST   |   Update On 2017-08-19 14:37:00 IST
விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் காஞ்சீபுரத்தில் அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து விரைவு பஸ்ஸை ஜப்தி செய்தனர்.
காஞ்சீபுரம்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலம் கடந்த 2002 -ம் ஆண்டு காஞ்சீபுரத்திற்கு மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை எடுத்து வந்து விற்பனை செய்துவிட்டு சிங்கில்பாடிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரையில் வந்துகொண்டிருந்தபோது தமிழ்நாடு அரசு விரைவு பஸ் மாட்டு வண்டி மீது மோதியது. இதில் பாஞ்சாலம் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு காஞ்சீபுரம் மாவட்ட நீதிமன்றம் எண்.2-ல் விசாரணைக்கு வந்தது. கடந்த 13.2.2006ல் பாஞ்சாலத்திற்கு அரசு போக்கு வரத்து துறை ரூ.7 லட்சம் நஷ்ட ஈடுவழங்க கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆனால் போக்குவரத்து துறையினர் இதுவரை அந்த நஷ்ட ஈடு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த பணத்தை அசல் வட்டி சேர்த்து ரூ.14 லட்சத்து 4 ஆயிரத்து 853 வழங்க கோரி பாஞ்சாலம் காஞ்சீபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி கருணாநிதி அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதையொட்டி கோர்ட் அலுவலர்கள் நேற்று மாலை 5 மணிக்கு காஞ்சீபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து விரைவு பஸ்ஸை ஜப்தி செய்தனர். இந்த பஸ்சில் இருந்த 35 பயணிகள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News