செய்திகள்

மாணவிகளை ஏற்றி சென்ற வேன் வாய்க்காலில் கவிழ்ந்தது: 9 பேர் காயம்

Published On 2017-07-06 22:27 IST   |   Update On 2017-07-06 22:27:00 IST
வலங்கைமான் அருகே மாணவிகளை ஏற்றி சென்ற வேன், வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கண்டியூர் பகுதியில் இருந்து நேற்று காலை தனியார் வேனில் மாணவிகள் 7 பேர் குடவாசல் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை கண்டியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல்காந்தி (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். புல்லவராயன் தோப்பு பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் வேன் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்து மாணவிகள் சத்தம் போட்டனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து வேனில் சிக்கியிருந்த மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் ராகுல்காந்தி, கிளனர் மற்றும் கண்டியூரை சேர்ந்த கல்லூரி மாணவி இந்துஜா(19), பள்ளி மாணவிகள் நிவேதா(11), மீனா(11), திவ்யா(15), அஞ்சுதா(11), கவுசல்யா(12), தாரணி(5) ஆகிய 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக குடவாசல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மீனா, அஞ்சுதா, தாரணி ஆகிய 3 மாணவிகள் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் இஞ்ஞாசிராஜ், வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News