செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து 3-வது நாளாக பட்டாசு -தீப்பெட்டி ஆலைகள் மூடல்: 8 லட்சம் பேர் வேலை இழப்பு

Published On 2017-07-02 12:11 GMT   |   Update On 2017-07-02 12:11 GMT
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனையகங்கள் 3-வது நாளாக மூடப்பட்டன. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளானார்கள்.

விருதுநகர்:

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி. வரி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை மிகவும் பாதித்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

பட்டாசு தொழிலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க பட்டாசு உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து கடந்த 30-ந் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கு ஆதரவாக பட்டாசு விற்பனையகங்களும் மூடப்பட்டுள்ளன.

பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் அனைத்தும் 30-ந் தேதி முதல் அடைக்கப்பட்டு உள்ளன.

600-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனையகங்களும் திறக்கப்பட வில்லை. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இதே போல் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கின. இன்று 2-வது நாளாக விருதுநகர் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடிக்கிடந்தன. இதனால் சுமார் 3 லட்சம் பேர் வேலை இழப்புக்கு ஆளானார்கள்.

Tags:    

Similar News