செய்திகள்

புதுக்கோட்டை - திண்டுக்கல் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்

Published On 2017-06-14 16:53 IST   |   Update On 2017-06-14 16:53:00 IST
புதுக்கோட்டை - திண்டுக்கல் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்க தலைவர் மாருதி மோகன்ராஜ் சந்தித்து மனு அளித்தார்.

அதில் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுக்கோட்டை-காரையூர் -துவரங்குறிச்சி- திண்டுக்கல் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.

வேதாரண்யம்-பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை - திண்டுக்கல்-பாலக்காடு -கோழிக்கோடு ஆகிய வரலாற்று நகரங்களை இணைத்து பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் சார்பில் பொது மக்களுக்கும், மாவட்ட போக்குவரத்து அலுவலக துறையினருக்கும் பெரும் உதவியாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், நகரில் வாகன விபத்து நடந்தால் உடனடியாக அவர்களுக்கு உதவிடவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் தனியாக இடம் ஒதுக்கி தருமாறும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழக முதல்வரிடம் இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் வைரமுத்து, கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் சங்க செயலாளர் சேது.கார்த்திகேயன், துணை.தலைவர் ஜெயக்குமார், கவிஞர் தங்கம்மூர்த்தி, சலீம், சொக்கலிங்கம், கவிஞர் சம்பத்குமார், ரமேஷ், பாரதி பாபு, முத்துசாமி, ஜேம்ஸ், இனியன், ரவிச்சந்திரன், கருணாகரன், கருப்பையா, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News