செய்திகள்

தமிழக அரசு முதல்வர் கையில் இல்லை; 3 எம்.எல்.ஏ.க்களின் கையில் உள்ளது- ஜி.கே. வாசன்

Published On 2017-06-14 15:59 IST   |   Update On 2017-06-14 15:59:00 IST
தமிழக அரசு முதல்வர் கையில் இல்லை. 3 எம்.எல்.ஏ.க்கள் கையில் தான் உள்ளது என புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய, மாநில அரசுகள் ஒரு காலக்கெடுவிற்குள் தமிழகத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் இருந்த போது பேரம் பேசப்பட்டதாக வந்த வீடியோவை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இருப்பினும் உண்மை தன்மையை சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு முதல்வர் கையில் இல்லை. 3 எம்.எல்.ஏ.க்கள் கையில் தான் தமிழக அரசு உள்ளது. ஆந்திரா அரசு சித்தூர் கோசலாற்றின் குறுக்கே 5 தடுப்பணைகளை கட்டி வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் கடுமையாக ஏற்படும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை சந்தித்து தடுப்பணை கட்டும் ஆந்திர அரசை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தற்போது தமிழக சட்டமன்றம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மீனவர் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, மாட்டிறைச்சி விவகாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது ஜனநாயக உரிமை. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க த.மா.கா. தயாராக உள்ளது. தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News