செய்திகள்

இலவச கல்விக்கு பணம் கேட்ட கல்லூரியை கண்டித்து கலெக்டரிடம் பிச்சை எடுத்து வசூல் செய்த மாணவர்கள்

Published On 2017-06-13 12:00 IST   |   Update On 2017-06-13 12:00:00 IST
அரியலூரில் இலவச கல்விக்கு பணம் கேட்ட கல்லூரியை கண்டித்து மாவட்ட கலெக்டரிடம் பிச்சை எடுத்து வசூல் செய்த மாணவர்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்:

படித்து முடித்தற்கான சான்றிதழ் பெறுவதற்கு பணம் கேட்பதாக அரியலூர், அருகேயுள்ள தனியார் கல்வியியல் கல்லூரி மீது புகார் எழுந்தது.

அந்த தனியார் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரனிடம், கல்லூரியில் படித்த திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி மாணவர்கள் கூறுகையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் போத்திரமங்கலம், சிறுமுளை உள்ளிட்ட பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அரியலூர் மாவட்டம் தனியார் கல்வியியல் கல்லூரியில் 2014- 2016 ஆம் கல்வி ஆண்டில் பயின்றுள்ளோம்.

கல்லூரி நிர்வாகம் தங்கள் பகுதியில் வந்து எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எதுவும் கிடையாது என்றும், எங்கள் கல்லூரியில் சேர்ந்த படியுங்கள் என்று கூறி எங்கள் வீட்டிலேயே வந்து எங்களது பன்னிரெண்டாம் வகுப்பு டி.சி. மற்றும் மார்க் லிஸ்ட்டை அப்போதே வாங்கிச் சென்றனர்.

நாங்களும் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். படிக்கும்போது பல்வேறு வகையில் சிறுக, சிறுக பணம் வசூல் செய்து விட்டனர். தற்பொழுது நாங்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு எங்களது கல்லூரி சான்றுகளை பெறுவதற்கு சென்ற போது கல்லூரிக்கு கட்டவேண்டிய பாக்கி ரூ.50 ஆயிரத்தை கட்டி விட்டு சான்றிதழ்களை பெற்றுச் செல்லுங்கள் என கூறினர்.

இதுகுறித்து அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நாங்கள் எங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள எங்களுக்கு பிச்சை போடுங்கள் என தட்டு ஏந்தி சென்று மாவட்ட கலெக்டர் (பொ) தனசேகரனிடம் மனு கொடுத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

இது குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News