செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மானிய விலையில் இடுபொருட்கள்: கலெக்டர் கணேஷ் வழங்கினார்

Published On 2017-06-07 19:37 IST   |   Update On 2017-06-07 19:37:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் மானிய விலையில் பயனாளிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம்,கீரனூர் உள் வட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், மருதூர், வாலியம்பட்டி, வாழமங்கலம், ஒடுக்கூர், ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட மங்கதேவன் பட்டி, நாஞ்சூர், ஒடுகம்பட்டி, சீமானூர், வத்தனாக்குறிச்சி, வடுகப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு 1,426-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

வருவாய் தீர்வாயம் நடைபெற்ற குறுவட்டங்களை சார்ந்த வருவாய் கிராம மக்கள் கலந்து கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் நலத் திட்டஉதவி கோருதல், பட்டா மாறுதல், பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வருவாய் தீர்வாயம் நடைபெறும் குறுவட்டங்களை சேர்ந்த கிராமங்களுக்கான அடங்கல் மற்றும் கணக்கு புத்தகங்களை பார்வையிட்டு கணக்குகள் சரியாக உள்ளனவா என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கேட்டறிந்து, அந்த கிராமங்களுக்கான கிராம புலப்படங்களை பார்வையிட்டு தணிக்கை செய்தார்.

நில அளவைத்துறையினர் பயன்படுத்தும் நில அளவை கருவிகள் சரியாக உள்ளனவா? என்றும் ஆய்வு செய்தார்.

மேலும் வேளாண்மைத் துறையின் சார்பில் தேசிய மண்வள அட்டை இயக்க திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளும், நீடித்தமானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மானிய விலையில் உளுந்து இடுபொருட்களும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் ராஜகோபால், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, வட்டாட்சியர்கள் கலைமணி, சுப்பையா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News