இளையான்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
சிவகங்கை:
இளையான்குடி தாலுகா முள்ளியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான்சி. இவர், வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய ஆரோக்கிய ஜான்சி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்ததால் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து இளையான்குடி போலீசில், ஆரோக்கிய ஜான்சி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பீரோவில் இருந்த 4¾ புவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக ஆரோக்கிய ஜான்சி தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.