செய்திகள்

புதுக்கோட்டையில் கைதி தப்பி ஓடிய சம்பவம்: சிறை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

Published On 2017-06-05 16:58 IST   |   Update On 2017-06-05 16:58:00 IST
கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் பணியின் போது கவனக்குறைவாக இருந்த சிறை காவலர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சிசிறைத்துறை டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர் கடந்த 2.10.16 அன்று ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், திருமயம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட சுரேஷ்குமார் உள்ளிட்ட கைதிகளை ஜெயிலில் உள்ள அறைகளில் இருந்து சிறை காவலர்கள் திறந்து விட்டனர். அப்போது ஜெயில் சுவற்றின் மீது ஏறி கைதி சுரேஷ்குமார் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிறை காவலர்கள் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் சுரேஷ்குமார் தப்பி ஓடிய சம்பவத்தில் பணியின் போது கவனக்குறைவாக இருந்த சிறை காவலர்கள் அன்பழகன், ரவி, மோகன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

Similar News