காரைக்குடி அருகே கோவில் திருவிழாவில் பெண்ணிடம் நகை அபேஸ்: மூதாட்டி கைது
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் எழில் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வினோதினி (வயது 28). இவர் நேற்று பள்ளத்தூர் சிவன் கோவிலில் நடைபெற்ற வைகாசி திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காக வினோதினி வரிசையில் நின்றார்.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த 65 வயது மூதாட்டி நைசாக அவரது கைப்பையை திருடினார். அதில் 6 பவுன் நகை இருந்தது.
வினோதினி கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அருகில் நின்றிருந்த மூதாட்டியை சோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் கைப்பை இருந்தது. இதனையடுத்து பொது மக்கள் மூதாட்டியை பள்ளத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சென்னை ஆவடியைச் சேர்ந்த வசந்தா என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.